இயற்கை விவசாயிகள் கட்டணமில்லாமல் அங்ககச்சான்று பெறலாம்


இயற்கை விவசாயிகள் கட்டணமில்லாமல் அங்ககச்சான்று பெறலாம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் இயற்கை விவசாயிகள் கட்டணமில்லாமல் அங்ககச்சான்று பெறலாம் என்று மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயற்கை முறையில் விவசாயிகள் பலர் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள், பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அங்ககச்சான்று பெறுவதற்கு 2 முதல் 3 கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் 5 முதல் 100 பேர் வரை ஒரு குழுவாக அமைத்து அனைவரும் சேர்ந்து அங்கக முறையில் பயிர் சாகுபடி செய்வோம் என உறுதிமொழி ஏற்று அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு உறுதிமொழி படிவம், பண்ணையின் பொது விவரங்கள், ஆதார் நகல், புகைப்படம், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகள் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு ஆய்வறிக்கைகள் சரிபார்க்கப்பட்டு அங்ககச்சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணமில்லாமல் அங்ககச்சான்று

இத்திட்டத்தில் விவசாயிகள் தனிப்பட்ட முறையில் சான்று பெற இயலாது. குழுவாக மட்டுமே பதிவு செய்ய இயலும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குழுக்களின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கட்டணமின்றி விவசாயிகள் எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் எஞ்சிய பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் உள்ளதா என பரிசோதனை செய்து பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இல்லை என சான்று பெற்ற பின்னர் விளைபொருட்களை விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.

எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் அல்லது ஏற்கனவே அங்கக முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து இத்திட்டத்தில் சேர விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story