கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் முகாம்
கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் முகாம் நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறையின் சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்விக்கான வழிகாட்டும் முகாம் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
முகாமில் உயர்கல்வியில் சேர மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக முன்னணி வங்கிகள் வந்திருந்து மாணவ-மாணவிகளுக்கு கடன் உதவி வழங்கினர். கல்லூரியில் சேர தேவையான இருப்பிடச்சான்று, வருமானச்சான்று, சாதிச்சான்று போன்ற அனைத்து விதமான சான்றிதழ்களையும் மாணவ-மாணவிகளுக்கு வருவாய் துறையின் இ-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உரிய அலுவலர்கள் விளக்கமளித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கன்னி, ஆர்.டி.ஓ. நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு வேப்பூர் அரசு மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்விக்கான வழிகாட்டும் முகாம் நடக்கிறது.