திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா, ராபி பருவத்தில் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்; கலெக்டர் பழனி தகவல்


திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில்      சம்பா, ராபி பருவத்தில் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்; கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா, ராபி பருவத்தில் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

கண்காணிப்புக்குழு கூட்டம்

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி முன்னிலை வதித்தார். இதில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன மாவட்ட பிரதிநிதிகள், பொது சேவை மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பழனி கூறியதாவது:-

பயிர் காப்பீடு

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு சாகுபடி செய்யும் சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 797 வருவாய் கிராமங்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள், 15.11.2023-க்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக ஏ.ஐ.சி.ஐ.எல். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சம்பா மற்றும் நவரை நெற்பயிருக்கு ரூ.492.75, உளுந்து ரூ.270.75, மணிலா ரூ.432, எள் ரூ.157.5, கரும்பு ரூ.2,750, வாழை ரூ.2,055, மரவள்ளி ரூ.1,517.2, மிளகாய் ரூ.1,102, கத்திரி ரூ.817.5 கட்டணமாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யலாம்

மேலும் அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலை பெற்று பயிர் காப்பீடு செய்யும் படிவங்கள் வழங்கி பயீர் காப்பீடு செய்யும் பணிகளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story