நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதே எங்கள் இலக்கு
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று திருவண்ணாமலையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று திருவண்ணாமலையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்
உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் இன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க. மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி., வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எவரஸ்ட் என்.நரேஷ்குமார், வடக்கு, தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் காலேஜ் ரவி, இ.எஸ்.டி.கார்த்திகேயன், தெற்கு, வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்கள் டாக்டர் பிரவீன்ஸ்ரீதரன், டாக்டர் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
ஆதரவு
அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் உள்பட பலர் பேசினர்.
மேலும் வியாபாரி சங்கங்கள், பழங்குடியினர் அமைப்பு, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தை மாலை 5 மணி அளவில் மாவட்ட செயலாளரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ.வேலு முடித்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
100 சதவீத வெற்றி
ஆண்டுதோறும் நீட் தேர்வினால் உயிர்களை மாய்க்கும் மாணவர்களை காப்பாற்றுவதற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்காக இதுவரை 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். நீட் விதிவிலக்கு தேவை என்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் 100 சதவீத வெற்றி பெற்றிருக்கிறது.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் அனுமதிக்காமல் இருந்த நீட் தேர்வை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிேயார்் ஆட்சி செய்த போது அனுமதித்தனர்.
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாங்கள் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று தான் வாக்குறுதி தந்தோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் மூலம் நீட் தேர்வு குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வை எதிர்த்து மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம் ஆனால் அதை அவர் கிடப்பில் போட்டு விட்டார்.
விலக்கு அளிக்க வேண்டும்
ஏழை மாணவ-மாணவிகளும் மருத்துவ படிப்பை படித்து டாக்டர்களாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அறப்போர் நடக்கிறது. நீட் தேர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 சதவீதம் எதிர்த்து வருகிறார்.
நடைபெற்று வருகிற திராவிட மாடல் ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பன்னீர்செல்வம், பி.கோவிந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், ஏ.ஏ.ஆறுமுகம் நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் முகமூடிகளை பலர் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.