எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்


எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்
x

கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

தொடக்க விழா

கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்ட தொடக்கவிழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்ராயன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (சுற்றுச்சூழல்) இளவரசி வரவேற்றார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சிந்திக்க செய்வது கல்வி

கல்வியின் வேர்கள் கசப்பானவை. அதன் கனிகளோ, இனிப்பானவை என அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். நாம் கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும். இப்போது நான் உங்கள் முன்னால் நிற்பதற்கு காரணம், என்னுடைய படிப்பு மட்டுமே. நான் இப்போதைய ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் அரசுப்பள்ளியில்தான் படித்தேன் என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். அரசுப் பள்ளியில் படிப்பதால் தரம் தாழ்ந்து விடுவதில்லை. சிந்திக்க செய்வதுதான் கல்வியின் முக்கிய நோக்கம். 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது கல்வி கிடையாது. கற்றதை செயல்படுத்துவதுதான் கல்வி. நீங்கள் உங்கள் பிறந்தநாளுக்கு ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், கல்விக் குழு தலைவர் ஆதிலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினர் லட்சுமி பூபதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் இயற்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


Next Story