பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம்


பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி தூய்மை பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி தூய்மை பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

நம்ம ஊரு சூப்பரு

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் தூய்மை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்ததுடன் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி சுற்றுப்புற தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கிராம பகுதிகளின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க ஒவ்வொருவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் நோய் தொற்று ஏற்படுகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட வேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். கழிவுநீரை தெருக்களில் விடக்கூடாது.

சுகாதாரம்

வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்கிறோமோ, அதே அளவிற்கு சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சுகாதாரத்தை பாதுகாத்து நம்ம ஊரு சூப்பரு என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு பேசினார். மேலும், விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று தூய்மை பணியை தொடங்கி வைத்து. தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, யூனியன் தலைவர்கள் மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி புல்லாணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story