வெளி மாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்சென்னையில் நடந்தது


வெளி மாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்சென்னையில் நடந்தது
x

தமிழகத்தில் வேலைபார்த்து வரும் வெளி மாநில தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை

சென்னை,

தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையூட்டும் விதமாகவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணவும், அவர்களது சட்டப்படியான உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டிட கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு குழுவின் தலைவர் சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி தலைமை தாங்கினார். தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன், நிர்வாக அலுவலர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையர், குழுவின் தலைவர் உமாதேவி வெளிமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சட்டப்படியான உரிமைகள், அரசின் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பான சட்ட உரிமைகளையும், வெளிமாநில தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு விவரங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

மேலும், பணியிடத்தில் வழங்கப்படும் சரியான பணி நிலைமை, குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேரம் வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, கழிவறை வசதி, பெண் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தாமை ஆகியவை உறுதிபடுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்குமாறும் கூடுதல் தொழிலாளர் ஆணையரால் வலியுறுத்தப்பட்டது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் பிரதிநிதிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், வெளிமாநில பணியாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.


Next Story