வெளியாட்களின் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
வெளியாட்களின் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
காங்கயம்
காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளியாட்களால் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
காங்கயம் அரசு மருத்துவமனை
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
இங்கு தினசரி 600-க்கும் அதிகமான வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அதேபோல் 60-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதிக கூட்டம் நிரம்பி இருக்கும்.
மக்கள் கூட்டம்
காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர் ஆகிய பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்களை உடனடியாக காங்கயம் அரசு மருத்துமனைக்கு தான் கொண்டு வரப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் காங்கயம் வெள்ளகோவில், ஊதியூர் போலீஸ் சரகங்களில் விபத்து உள்ளிட்டவைகளில் மரணம் அடைபவர்களின் உடல்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு தான் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக இந்த மருத்துவமனை வளாகத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
வெளியாட்களின் வாகனங்கள்
மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருவதால், அவர்கள் இங்குள்ள மரங்களின் நிழலில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். மேலும் இங்கு பணிபுரியும் சிலரும் இங்கு வாகனங்களை நிறுத்துகிறார்கள். இந்நிலையில் நிழலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வெளியாட்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிலும் ஒரு சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு பஸ் ஏறி வேலைக்கு சென்று விடுகிறார்கள். பின்னர் மாலை வேலை முடிந்து வந்து தங்களது வாகனங்களை எடுத்துச்செல்கிறார்கள். இங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானவை சம்மந்தமே இல்லாத வெளியாட்கள் தான் அதிக அளவில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு சில நேரம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே வருவதற்கும் இந்த இரு சக்கர வாகனங்கள் பெரிய இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கு வரும் நோயாளிகள் மரத்தின் நிழலில் சற்றே இளைப்பாற கூட சில நேரங்களில் இடமில்லாமல் போய் விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனைக்கு வருவோரை தவிர மற்ற வெளியாட்கள் இங்கு வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி விட்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.