வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்வது அவசியம்
வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்வது அவசியம்மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் அறிவுரை
திருப்பூர்
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
வெளிமாநில தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர் முறை திருத்தம் சட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை தடுத்தல் சட்டம், ஆள்கடத்தல் தடுப்பு சட்டம், சிறார் நீதிச்சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கி பேசினார். அப்போது, குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் மற்றும் அவர்களை பணியமர்த்தும்போது தொழில் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களையும், கொத்தடிமை தொழிலாளர்களையும் அறவே பணியமர்த்தக்கூடாது. வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும்போது அவர்களை பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் பற்றிய பதிவேடுகள், ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர் பற்றிய விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
கொத்தடிமை தொழிலாளர்
குழந்தை தொழிலாளர் முறை நீக்குதல் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துதல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் புகழேந்தி விளக்கி கூறினார். கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்து உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பேசினார். ஆட்கடத்தல் தடுத்தல் மற்றும் சிறார்நீதி சட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஆய்வாளர் ஹேமலதா பேசினார். வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துதல் சட்டம் குறித்து திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சந்தோஷ் விரிவாக எடுத்துக்கூறினார்.