100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்தனர்


100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி  ஹோமம் செய்தனர்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்தனர்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அட்டவிரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலில் காலசம்கார மூர்த்தி உற்சவராக அருள் பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

100-க்கும் மேற்பட்டோர்

இந்த நிலையில் நேற்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலுக்கு ஆயுள் விருத்தி ஹோமங்களை நடத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக மணி விழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி உள்ளிட்ட யாக பூஜைகள் செய்து திருமணங்களை செய்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மெயின் ரோடு, சன்னதி வீதி, மேல வீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பஞ்சமி சிறப்பு பூஜை

நேற்று முன்தினம் ஆடி மாதம் பஞ்சமி திதியையொட்டி வராகி அம்மனுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story