என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி


என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி
x

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு திங்கட்கிழமை நிறைவு பெறுகிறது. இதுவரை ஒரு லட்சம் இடங்கள் நிரம்பி இருப்பதாகவும், சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு, பொது கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன.

அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் பொதுப்பிரிவில் 80 ஆயிரத்து 951 இடங்களிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 8 ஆயிரத்து 475 இடங்களிலும் என மொத்தம் 89 ஆயிரத்து 426 இடங்களில் சேர்ந்திருந்தனர்.

99,448 இடங்கள் நிரம்பின

மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதற்கு 17 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களில் 9 ஆயிரத்து 809 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 8 ஆயிரத்து 869 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 378 பேர் தேர்வு செய்த இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். ஆக துணை கலந்தாய்வில் 9 ஆயிரத்து 247 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்பட்ட சிறப்பு, பொது, துணை கலந்தாய்வுகள் மூலம் மொத்தமாக 99 ஆயிரத்து 448 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. கடந்த ஆண்டில் சுமார் 90 ஆயிரம் இடங்களே நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காலி இடங்கள் எவ்வளவு?

கலந்தாய்வின் நிறைவாக, எஸ்.சிஏ. பிரிவில் இருந்து எஸ்.டி. பிரிவுக்கு இடங்கள் மாற்றிக்கொள்வதற்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்தமாக 2023-24-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு திங்கட்கிழமை நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களில், சுமார் ஒரு லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.

கலந்தாய்வில் இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமை முதல் பெரும்பாலான கல்லூரிகள் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க இருக்கின்றன. சில கல்லூரிகள் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வகுப்புகளை தொடங்குகின்றன.


Next Story