பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்


பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
x

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 6 மணி அளவில் மூலவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு மூலவருக்கு கத்தரிக்காய், கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டு, சிறுவர்-சிறுமியர்களின் கோலாட்டம் நடந்தது.

திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமிக்கு நாச்சியார் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் திண்டுக்கல் மலையடிவாரம் ஆஞ்சநேயர் கோவில், கோபால சமுத்திரம் பாலஆஞ்சநேயர் கோவில், முள்ளிப் பாடி ஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தின் 4-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டியில் உள்ள நரசிங்க பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். இதேபோல் சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அய்யம்பாளையம் லட்சுமிநரசிங்க பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் உள்ள வேங்கடேச பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூைஜ நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில், வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வடமதுரை, நத்தம்

வடமதுரை மங்கம்மாள் கேணி அருகே உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனாதி தைலம், பால்கேணி தீர்த்தம், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கும், தேவியர்களுக்கும் துளசி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அப்போது தேவியர்களுடன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

பழனி

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள் மற்றும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள், கொடைக்கானல் ரோட்டில் உள்ள கன்னடிய பெருமாள் கோவில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story