ஏலகிரி மலை அரசு பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் ஏலகிரி மலை அரசு பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் உள்ள சிறுவிளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் பெண்களுக்கான வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வந்தது.
இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெரியார் தாசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் கே.முனிசுப்ராயன், மாவட்ட கல்வி அலுவலர் இ.வெங்கடேச பெருமாள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.குணசுந்தரி, நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடகள போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் மாணவிகளுக்கான போட்டியில் ஏலகிரி மலை அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி ஆணையாளர் ஜி.பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் அனுராதா நன்றி கூறினார்.