கல்வராயன்மலையில்10 டன் ரேஷன் பொருட்களுடன் கவிழ்ந்த லாரி :சாலையில் அரிசி கொட்டி வீணானது
கல்வராயன்மலையில் 10 டன் ரேஷன் பொருட்களுடன் லாரி கவிழ்ந்தது. இதனால் சாலையில் அரிசி கொட்டி வீணானது.
கச்சிராயப்பாளையம்,
சின்னசேலத்தில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்திலிருந்து ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கல்வராயனலை கூட்டுறவு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து பல்வேறு மலைவாழ் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மதியம் கல்வராயன் மலை சேமிப்பு கிடங்கில் இருந்து மேல்பாச்சேரி, சின்னத்திருப்பதி, கொடமாத்தி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள், பாமாயில், கோதுமை உள்ளிட்ட 10 டன் மதிப்பிலான ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது.
சாலையில் கவிழ்ந்தது
அந்த லாரி, எட்றப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோசமான சாலையால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். மேலும் லாரியில் இருந்த ரேஷன் பொருட்கள் சாலையில் கொட்டியது. இதுபற்றிய தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, வேறு ஒரு லாரியை வரவழைத்து அதில் ரேஷன் பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும், சாலையில் கொட்டி வீணான அரிசி உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்த ஊழியர்கள் அகற்றினர்.
சாலை வசதி இல்லை
மலைகிராமத்தில் சாலை வசதி முறையாக இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதுநாள் வரைக்கும் எந்தஒரு அதிகாரியும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்பது தான் வேதனைக்குரியது. அதுவே இதுபோன்ற விபத்துக்கும் வழிவகுத்து வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.