"விழிப்புணர்வு வராவிட்டால் செயற்கை ஆக்சிஜன்தான்" என நிபுணர் எச்சரிக்கை


விழிப்புணர்வு வராவிட்டால் செயற்கை ஆக்சிஜன்தான் என நிபுணர் எச்சரிக்கை
x

“விழிப்புணர்வு வராவிட்டால் செயற்கை ஆக்சிஜன்தான்” என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

ஆதியில் காடுகளில் வாழ்ந்த மனிதன், எப்போது இலைகளையும், தழைகளையும் நாகரிகம் எனக் கருதி ஆடைகளாக உடுத்த தொடங்கினானோ, அன்றே மனிதன் மரங்களின் மீதான வன்முறையை தொடங்கிவிட்டான். இன்று நாம் வாழும் பூமி வெப்பமயமாக்கலில் சிக்கி எதிர்காலத்தில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற வெப்பப் பந்தாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

1950-ம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 13.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அது 1997-ம் ஆண்டு 14.6 டிகிரி செல்சியசாக அதிகரித்தது. வருடாவருடம் இந்த வெப்ப நிலையின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது எனவும், இதனால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, கரையோர பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கின்றனர்..

இதற்கெல்லாம் மூல காரணம் எது...? மரங்களின் அழிவுதான் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

ஆக்சிஜனை அள்ளித்தரும் மரங்கள்...

மரங்களை வளர்த்தால் ஆக்சிஜனை தாராளமாக பெறலாம் என்ற கருத்தை மக்களிடையே உணர்த்தும் வகையில் மதுரை வேளாண்மை கல்லூரி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது, அந்த கல்லூரிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் கல்லூரியின் எதிர்புறத்தில் உள்ளது.

அந்த நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான வேம்பு, இலுப்பை, புங்கன் என பல்வேறு வகை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த இடத்திற்கு "ஆக்சிஜன் பூங்கா" என பெயரிட்டு உள்ளனர். இந்த மரங்கள் தற்போது குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளன.

பூங்கா என்றதும் பொழுதுபோக்கு இடமாக இருக்குமோ, என நினைக்க வேண்டாம். சுற்றிலும் அமைக்கப்பட்ட கம்பி வேலிக்கு நடுவில் நூற்றுக்கணக்கான மரங்கள் மட்டுமே இங்கு நிற்கின்றன.

4 வழிச்சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த ஆக்சிஜன் பூங்கா, வாகனங்களில் செல்பவர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்ல. அவர்களின் உடல்நலத்தையும் பேணுவதற்கு ஆக்சிஜன் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

உச்சி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் கூட இந்த பூங்காவின் அருகில் சாலையோரம் நின்றால் போதும்... சிலுசிலுவென்ற காற்றும், நம்மை குளிர்வித்துச்செல்வதை உணர முடிகிறது. 4 வழிச்சாலைகளில் வாகனங்கள் அனல் பறக்கச்சென்றாலும் கூட, அங்கு சில நூறு மரங்கள் ஓரிடத்தில் இருந்தால் அவற்றின் பயன் என்ன என்பதை இந்த ஆக்சிஜன் பூங்கா நமக்கு உணர்த்துகிறது.

மழைப்பொழிவுக்கு காரணம்

இந்த பூங்காவின் நோக்கம் குறித்து வேளாண்மை கல்லூரி உழவியல் துறைத்தலைவர் துரைசிங் கூறியதாவது:-

மனிதன் கொண்ட பேராசையின் பெரும் விளைவாக காடுகளின் மீது கைவைத்து மரங்களை அழித்து, வாழுகின்ற பூமி தனக்கானது மட்டுமே என எண்ணி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஊறு விளைவித்தான். பயன்படுத்தாமல் வீசி எரியும் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி என மின்னணு கழிவு குப்பைகள் போன்றவையும் அவற்றின் பங்கிற்கு காற்றை நஞ்சாக்குகின்றன.

கடந்த ஆண்டில் கொரோனா தொற்றில் பாதித்தவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. ஆனாலும் பலர் பரிதாபமாக இறந்தனர். மற்ற உயிர்காக்கும் சிகிச்சைக்கும், ஆக்சிஜன் அத்தியாவசியமானது.

எந்த ஒரு உயிரினமும் பூமியில் வாழ்வதற்கு ஆக்சிஜன் அவசியம். நாகரிக வளர்ச்சி பெற்றதாக மார்தட்டிக்கொள்ளும் நாம், எதிர்காலத்தில் செயற்கை ஆக்சிஜனை நம்பியே இருக்கப்போகிறோம் என்பதை உணரமறந்துவிடுகிறோம். ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள், பசுமை உரம், பண்ணை உரம் ஆகியவை கொண்ட சரிவிகித கலவையை மரக்கன்றுகளுக்கு வைக்கப்பட்டு இந்த ஆக்சிஜன் பூங்கா பராமரிக்கப்படுகிறது. இதை விரிவுபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னோடி செயல்பாடு

மேலும் பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், தற்போதைய காலகட்டங்களில் வாகனங்களின் அதிகரிப்பால் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு காற்றில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவில்லை என்றால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு நாம் அவதிப்படுவோம்.

எனவே வேளாண்மை கல்லூரியில் ஏராளமான இயற்கை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மரங்கள் அதிகரித்தால்தான் மனிதர்களுக்கு ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே வேளாண்மை கல்லூரி சார்பில் ஆக்சிஜன் பூங்கா நிறுவப்பட்டு உள்ளது. இது பல்வேறு கட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.

மற்றவர்களுக்கு முன்னோடியாக வேளாண்மை கல்லூரி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தின் பரிணாமமாக இந்த பூங்கா உள்ளது. இங்கு மேலும் பல வகை மரங்கள் நட்டு பராமரிக்கப்படும்" என்றனர்.

ஆக்சிஜனின் அத்தியாவசியத்தை உணர்த்தும் ஆக்சிஜன் பூங்காவை பராமரித்து வரும் இக்கல்லூரியின் நோக்கத்தை நாம் அனைவரும் பின்பற்றலாமே...


Next Story