காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.90 லட்சத்தில் புதிய உடற்கூராய்வு கட்டிடம் ப.சிதம்பரம் அடிக்கல் நாட்டினார்


காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.90 லட்சத்தில் புதிய உடற்கூராய்வு கட்டிடம்  ப.சிதம்பரம் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:00 PM GMT (Updated: 24 Oct 2023 7:01 PM GMT)

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.90 லட்சத்தில் புதிய உடற்கூராய்வு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

காரைக்குடி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. மாவட்ட மக்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சாக்கோட்டை, கண்ணங்குடி, இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் அவரிடம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிக்காப்பீடு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர், கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பயிர்காப்பீட்டு குறைதீர்க்கும் குழுவும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் ஆலோசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

இதையடுத்து காரைக்குடி, சிவகங்கை மாணவ, மாணவிகளுக்கு கல்விகடன் வழங்கும் மேளாவில் கல்விகடன் வழங்கப்பட்டது. திருப்பத்தூரிலும் கல்விகடன் மேளா நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் விடுத்த வேண்டுகோளை ஏற்று விழா நடத்தப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இத்தகவல் காரைக்குடியில் உள்ள ப.சிதம்பரம் எம்.பி. அலுவலக செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ப.சிதம்பரம் எம்.பி. தனது தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய உடற்கூராய்வு கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் மாங்குடி எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி, சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொறுப்பு டாக்டர் தர்மர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story