பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியது

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதை தொடர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதை தொடர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 7 மணியளவில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைப்பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக்கிறது. மலையோர பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் வெள்ள அபாய அளவான 42 அடியை எட்டியது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவின் சார்பில் கோதையாறு மற்றும் தாமிரபரணியாற்று வடிநிலப் பகுதிகளான களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காப்பட்டணம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் அணை நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையும், அதனைத் தொடர்ந்து உபரிதண்ணீரும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்காணிப்பு
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ள நிலையில் அணையில் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தொடர் கன மழை பெய்து அணையின் நீர்மட்டம் 44 அடியைக் கடந்து சென்றால், அணையிலிருந்து உபரி நீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 621 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 257 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 535 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






