பசுவின் வயிற்றில் 65 கிலோ பாலித்தீன் கழிவுகள்
மதுரையில் பசுவின் வயிற்றில் 65 கிலோ பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
மதுரையில் பசுவின் வயிற்றில் 65 கிலோ பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
கன்று ஈன்ற மாடு
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பரமேசுவரன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிர் இனத்தை சேர்ந்த பசு ஒன்றை வாங்கினார். அந்த பசு, 2 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றது. அதன்பின்னரும், பசுவின் வயிறு பெரிதாக இருந்தது.
எனவே பரமேசுவரன் சந்தேகம் அடைந்து, பசுவை மதுரை கால்நடைத்துறை பன்முக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அந்த பசுவை முதன்மை டாக்டர் வைரவசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்ததில், மாட்டின் வயிற்றுப்பகுதியில் கழிவு பொருட்கள் அதிக அளவில் தேங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பசுவிற்கு டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்தனர்.
அந்த பசுவின் வயிற்றில் தேங்கி இருந்த பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் மொத்தமாக வெளியே எடுக்கப்பட்டன.
சுமார் 65 கிலோ எடையில் அந்த கழிவு பொருட்கள் இருந்தன. மேலும் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன. இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. அந்த பசுவும், அதன் கன்றும் மதுரை தல்லாகுளம் பன்முக மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடன் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
65 கிலோ பிளாஸ்டிக்
இதுகுறித்து டாக்டர் வைரவசாமி கூறியதாவது:-
இந்த பசுவின் வயிற்று பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. கிட்டத்தட்ட 65 கிலோவிற்கும் மேல் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. பொதுவாக பசு மாட்டின் வயிற்றுப்பகுதி 110 கிலோ கொள்ளளவு கொண்டது. ஆனால், இந்த பசுவின் வயிற்றில் இவ்வளவு பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை அகற்றியது பெரிய விஷயம்தான்.
இதற்கு முன்பும் இதுபோல், பசுமாட்டின் வயிற்றில் இருந்து பாலித்தீன் பொருட்களை அகற்றி இருக்கிறோம். ஆனால், இந்த அளவிற்கு அதிகமாக அகற்றியது இல்லை.
மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார் அறிவுறுத்தலின் பேரில், உதவி டாக்டர்கள் முத்துராமன், அறிவழகன், விஜயகுமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து பசுமாட்டுக்கு சிறந்த சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டு உள்ளது.
உணவகங்கள்
குறிப்பாக உணவகங்களில் இருந்து மிஞ்சிய உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வந்து குப்பை தொட்டியில் வீசுகிறார்கள். அந்த குப்பையை பசுக்கள் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும்.
மேலும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, இலை, மஞ்சப்பை போன்றவற்றை பயன்படுத்தி உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பவர்கள், சத்தான உணவுகளை தங்கள் கால்நடைகள் சாப்பிடுகிறதா? என்பதை கவனிப்பதும் அவசியம். பசுக்களை காற்றோட்டம் உள்ள இடத்தில் வளர்க்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.