திருவாரூரில் பதனீர் விற்பனை மும்முரம்
திருவாரூரில் பதனீர் விற்பனை மும்முரம்
திருவாரூரில் பதனீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 1 லிட்டர் பதனீர் ரூ.80-க்கு விற்பனையாகிறது.
கற்பக விருட்சம்
`கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படும் பனை மரம் நீண்ட காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை பெற்றது பனை. மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பயன் உள்ளதே. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கருத்து யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
30 மீட்டர் வரை உயர்ந்து வளரும் வலுப்பெற்றது, இந்த மரம். உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடிய மரம் என்றால் அது பனை மரம் தான். பனையில் இருந்து 90 வகையான உப பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதனீர் விற்பனை
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை நேற்று அதிக அளவில் நடைபெற்றது.
திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் தற்போது பதனீர் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை சாலையில் பதனீர் விற்பனை நடந்து வருகிறது. 1 டம்ளர் பதனீர் ரூ.20-க்கும், 1 லிட்டர் பாட்டில் பதனீர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் காத்திருந்து பதனீர் வாங்கிச்சென்றனர்.
சீசன் காலங்களில் வியாபாரம்
இதுகுறித்து பதனீர் வியாபாரிகள் கூறுகையில்,
திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து பதனீர் விற்பனை செய்ய வந்துள்ளோம். நாகை மாவட்டத்தில் உள்ள பறவை பகுதியில் உள்ள பனை மரங்களை குத்தகை எடுத்து பதனீர் இறக்குகிறோம். அதன் பின்னர் வாடகை வாகனத்தில் கொண்டு வந்து திருவாரூரில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது சீசன் காலமாக உள்ளதால், மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த பகுதியில் விற்பனை செய்வோம். சீசன் காலம் முடிந்ததும், சொந்த ஊருக்கு சென்று வேறு வியாபாரங்களில் ஈடுபடுவோம் என்றனர்.