பஸ் மோதி பாதயாத்திரை பெண் பக்தர் பலி; 3 பேர் படுகாயம்
மணப்பாறை அருகே பஸ் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் வர தாமதமானதால் பாதயாத்திரை பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அருகே பஸ் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் வர தாமதமானதால் பாதயாத்திரை பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பழனிக்கு பாதயாத்திரை
கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்தனர்.
இந்த பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆசாத்ரோடு பகுதியில் உள்ள ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, பஞ்சாலைக்கு சொந்தமான ஒரு பஸ் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
பெண் பக்தர் பலி
இதில் பஸ் மோதியதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) என்பவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதை கண்ட சகபாதயாத்திரை பக்தர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் வர காலதாமதமானதால் ஆத்திரம் அடைந்த பாதயாத்திரை பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதைத்தொடர்ந்து வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.