தோகைமலை பகுதியில் பெய்த மழையால் நெல், வைக்கோல் நனைந்து வீணானது


தோகைமலை பகுதியில் பெய்த மழையால் நெல், வைக்கோல் நனைந்து வீணானது
x

தோகைமலை பகுதியில் பெய்த மழையால் நெல், வைக்கோல் நனைந்து வீணானது. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

மழையால் சேதம்

கரூர் மாவட்டம், தோகைமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த நெற்கதிர்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடை பணிகளை தொடங்கினர். ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோகைமலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும், அறுவடைக்கு பின்பு வயலில் கிடந்த வைக்கோல்களும் மழைநீரில் நனைந்து சேதம் ஆனது.

இதனால் அறுவடைக்கு பிறகு வைக்கோல்களை சேகரிக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தரையில் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களது வயலில் உள்ள நெல்மணிகள் மீண்டும் முளைத்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். பல்வேறு செலவுகளுக்கு இடையே சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த விவசாயிகள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேதம் ஏற்பட்டு உள்ளது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதனை அடுத்து மழையினால் நனைந்த வைக்கோல்களை விவசாயிகள் வெயிலில் உலர்த்தி வருகின்றனர். இதேபோல் மழையினால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் முளைப்பதற்குள் அறுவடை செய்வதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story