சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்


சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
x

மழையில் நனையாமல் இருக்க சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்முதல் நிலையத்தில் மொத்தம் எத்தனை மூட்டைநெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து நெல் ஈரப்பதத்தை பரிசோதிக்கும் ஈரப்பதமானி கருவியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். தற்போது வெப்ப சலனத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது. எனவே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதை தடுக்க சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

பாதிப்பு ஏற்படாத வகையில்...

எந்த காரணத்தை கொண்டும் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய கூடாது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இந்தஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story