திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா


திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 9:08 AM GMT)

திருத்துறைப்பூண்டியில், நெல் திருவிழா நடந்தது. விழாவில் மாட்டுவண்டி ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

தேசிய நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேசிய நெல் திருவிழா மற்றும் உணவு திருவிழா, கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவை நேற்றுமுன்தினம் தொடங்கியது.

விழாவையொட்டி உழவர் சந்தை அருகில் இருந்து தொடங்கிய மாட்டுவண்டி ஊர்வலத்திற்கு தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். வேலுடையார் கல்விக்குழும தலைவர் தியாகபாரி, பாரத மாதா தொண்டு நிறுவன இயக்குனர் எடையூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாட்டுவண்டி ஊர்வலத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாரம்பரிய 174 நெல் ரகங்கள் கண்காட்சி

விழாவில் பாரம்பரிய 174 நெல் ரகங்கள் கண்காட்சி ஏ.ஆர்.வி. நிறுவனங்களின் இயக்குனர் ஏ.ஆர்.வி. விவேக் தலைமையில் நடந்தது. கண்காட்சியை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு திறந்து வைத்தார். கண்காட்சியில் பாரம்பரிய 174 நெல் விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி அரங்க திறப்பு நிகழ்ச்சி நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மறைந்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் உருவப்படத்தை மாரிமுத்து எம்.எல்.ஏ. திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

விவசாயிகளுக்கு விதை நெல்

நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் ராஜா முன்னிலை வகித்தார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வரவேற்றார். இதில் இந்தியாவின் பாரம்பரிய விதையின் பாதுகாவலர் டெபல் பேசினார்.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் நம்மாழ்வார் விருதும், தமிழ்நாடு அரசு டான்சிட்கோ நிர்வாக இயக்குனர் மதுமதி நெல் ஜெயராமன் விருதும் வழங்கினர்.

நாட்டுப்புற கலைநிகழ்ச்சி

பின்னர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டு பாரம்பரிய உணவு நூலை வெளியிட்டார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உழவர்களின் நண்பன் விருதும், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் மேகநாதன் சிறந்த இளம் இயற்கை உழவர் விருதும் வழங்கினர்.

விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிரங்கம் பாரம்பரிய இயற்கை நெல் பாதுகாப்பு மைய இயக்குனர் ராஜீவ் செய்திருந்தார்.

அமைச்சர் பங்கேற்பு

நேற்று 2-வது நாளாக தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. இதில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், இயற்கை ஆர்வலர் அருண் சின்னப்பா, நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்ட குழு தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு விதை நெல்லும், பாரம்பரிய நெல் சாகுபடி- சூழலியல் சார்ந்த சேவை அமைப்புகள், விவசாயிகளுக்கு விருதுகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை டெல்டா மண்டலத்தில் விவசாயம் சார்ந்த ஒரு தொழிற்பேட்டை அமைக்கப்படும். பாரம்பரிய நெல் அரிசி ரகங்களை அரைப்பதற்கு என்றே ரூ.2 கோடி மதிப்பீட்டில் உணவுத்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்த நவீன அரிசி ஆலை விரைவாக அமைக்கப்படும். பாரம்பரிய நெல் உற்பத்தியை விவசாயிகள் அதிகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில், அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாரம்பரிய அரிசி வகைகளை கொண்டு சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மன்னார்குடியில் உள்ள 93 குளங்களையும் இணைப்பதற்கு ரூ.90 கோடியில் திட்டம் ஒன்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்றார்.


Next Story