மின்தடையால் நெல் நடவு பணி பாதிப்பு
பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடையால் நெல் நடவு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான பெருவளையம், ரெட்டிவலம், மேலபுலம், வேளியநல்லூர், ஜாகீர் தண்டலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் பயிரிடபட்டுவருகிறது. தற்போது நவரை பருவ நெல் சாகுபடி முடிந்தது. தொடர்ந்து ஏரி, குட்டைகளில் போதுமான அளவு நீர் இருப்பதால் சித்திரை பட்ட பருவ நெல் நடவு பணி தொடங்கியுள்ளது.
இதனால் நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மிகவும் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மும்முனை மின்சாரம் சரியாக விநியோகம் செய்யாமல் தினமும் காலை 5 மணி முதல் 8.30 மணிவரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே காலை நேரங்களில் மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.