தமிழகத்தில் இந்த ஆண்டு 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு- அமைச்சர் சக்கரபாணி


தமிழகத்தில் இந்த ஆண்டு 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு- அமைச்சர் சக்கரபாணி
x

தமிழகத்தில் இந்த ஆண்டு 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தஞ்சாவூர்

தமிழகத்தில் இந்த ஆண்டு 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேமிப்பு கிடங்குகள்

தமிழகத்தில் உள்ள திறந்தவெளி கிடங்குகள் முழுபாதுகாப்புடன் கூடிய கிடங்குகளாகவும், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.238 கோடி செலவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது.

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் டன் கொள்ளளவுடனும், திட்டக்குடியில் 7,500 டன் கொள்ளளவுடனும், செல்லம்பட்டியில் 6 ஆயிரம் டன் கொள்ளளவுடனும் கட்டப்படுகிறது.

ஜனவரி 10-ந் தேதிக்குள்...

இதேபோல் சிவகங்கை, திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் கட்டப்படுகின்றன. இந்த சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணி ஜனவரி மாதம் 10-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.

தமிழகத்தில் 103 இடங்களில் 7.94 லட்சம் டன் நெல் சேமிப்பதற்கு கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனுடன் தற்போது கட்டப்பட்டு வரும் 2.85 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளையும் சேர்த்து மொத்தம் ஏறத்தாழ 11 லட்சம் டன் நெல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

58 லட்சம் டன் நெல்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1 லட்சத்து 97 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 2.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குறுவை பருவத்தில் 8.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3,500 கொள்முதல் நிலையங்கள்

இதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 650 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

ரூ.6,813 கோடி நிலுவை

தமிழகத்துக்கு சர்க்கரை, அரிசி உள்ளிட்டவற்றுக்கான மானியமாக ரூ.5,120 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மானிய தொகை ரூ.6,813 கோடி நிலுவையில் உள்ளது.

ரேஷன் கடைகளில் கண் கருவிழி திரை மூலம் பொருட்கள் வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கொள்முதல் செய்வதற்கு தேவையான தளவாட பெருட்கள் இருப்பு உள்ளது. அதிகமாக நெல் அறுவடை நடைபெறும் இடங்களில் 2 கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தஞ்சை மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story