42 லட்சம் டன் நெல் கொள்முதல்


42 லட்சம் டன் நெல் கொள்முதல்
x

2021-22-ம் ஆண்டில் இதுவரை 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

2021-22-ம் ஆண்டில் இதுவரை 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாண்மை இயக்குநர் பிரபாகர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனர் சிவஞானம், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் சங்கர், எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 14 மாதங்களில் 12 லட்சத்து 88 ஆயிரத்து 953 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகள் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரத்து 382 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

மேட்டூர் அணையில் முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதி 2022-23-ம் நெல் கொள்முதல் பருவம் ஒரு மாதம் முன்னதாக தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்தலை தடுக்க எல்லையோர மாவட்டங்களில் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 295 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் கட்டுவதற்காக முதற்கட்டமாக 3 லட்சம் மெட்ரிக் டன் செமி குடோன் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story