மின் இணைப்பு வழங்காததால் நெல் கொள்முதல் பணி பாதிப்பு
காட்டுகுறிச்சி அரசு கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்காததால் நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மெலட்டூர்:
காட்டுகுறிச்சி அரசு கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்காததால் நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அரசு கொள்முதல் நிலையம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா காட்டுகுறிச்சி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் தற்போது கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் கோடை நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை, காட்டுகுறிச்சி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொட்டி வைத்துள்ளனர்.
மின் இணைப்பு வழங்கவில்லை
இந்த கொள்முதல் நிலையத்துக்கு மின்வினியோகம் வழங்காததால் நெல் மூட்டைகளை எடைபோட முடியாமலும், நெல்லை தூற்ற முடியாமலும் உள்ளதால் நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காட்டுகுறிச்சி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். ஆனால் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மின் இணைப்பு வழங்காததால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்
இதன் காரணமாக விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நெல் மணிகளை கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்திருந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நெல்மணிகள் நனைந்து வீணாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கி கொள்முதல் பணி நடைபெற நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றனர்.