9 மாதங்களில் ரூ.1,607 கோடிக்கு நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 9 மாதங்களில் ரூ.1,607 கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது 8 லட்சம் டன்னை எட்டுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் நெல், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் மூலமும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை நெல் கொள்முதல் பருவம் என கணக்கிடப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
618 கொள்முதல் நிலையங்கள்
அதன்படி நடப்பு ஆண்டு கொள்முதல் பருவத்துக்கு நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அதிகபட்சமாக சம்பா பருவத்தில் 618 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும் அறுவடை நடைபெறும் இடங்களிலும் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டன. அதன்படி ஏ கிரேடு நெல் ரகம் குவிண்டால் ரூ.2060-க்கும், பொது ரகம் ரூ.2015-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நெல்கொள்முதல் குறைந்ததையடுத்து கொள்முதல் நிலையங்களும் குறைக்கப்பட்டன.
7.89 லட்சம் டன் கொள்முதல்
தற்போது தஞ்சை மாவட்டத்தில் 193 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 400 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடைபெற்றுள்ளது. தற்போது கோடை நெல் மட்டும் 61 ஆயித்து 212 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு கோடை நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டு 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நெல் கொள்முதல் பருவம் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் நெல் கொள்முதல் இந்த ஆண்டு இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1,607 கோடி பணம் பட்டுவாடா
இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 726 விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். நெல் கொள்முதலுக்காக இதுவரை ரூ.1,607 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது என்று நுகர்பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.