சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு - கலெக்டர் தகவல்


சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு - கலெக்டர் தகவல்
x

சிலாவட்டத்தில் ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வரவேற்று பேசினார். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை, அனைத்து வகை பயிர் சாகுபடி விவரங்கள் மற்றும் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பேசும்போது கூறியதாவது:-

சிலாவட்டம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் சேமிப்பு கிடங்கு ரூ.65 கோடி மதிப்பீட்டில், 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கட்டப்பட உள்ளது. 10 நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உலர் களங்கள் அமைக்கவும், பல்வேறு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும், அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அனைத்து வட்டார விவசாயிகளும் தங்கள் குறைகளை மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.

பின்னர் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் பொறியியல் துறையினரால் ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகளை தெளிப்பு செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலை துறை மூலம் கத்தரி, மிளகாய் நாற்றுகள் மற்றும் மா, கொய்யா கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கெ.ஏழுமலை கடந்த 26.5.2022 அன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தின்போது விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கான பதிலை படித்து காட்டினார்.


Next Story