படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை மாதத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், நாக்குபெட்டா தலைவர் முருகன், நீலகிரி ஆதிவாசிகள் சக்தி தலைவர் குள்ளாகவுடர், படுகர் கூட்டமைப்பு தலைவர் பொப்ளி, நாக்குபெட்டா நல சங்க துணை பொதுச்செயலாளர் சண்முகம், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குமார், மணிகண்டன், பரமேஸ்வரன், தருமன் உள்பட 11 பேர் உள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று முன்தினம் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து, படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உடனிருந்தார்.