நடைபயிற்சி சென்ற போது பரிதாபம்; கன்டெய்னர் லாரி மோதி ராணுவ ஊழியர் பலி


நடைபயிற்சி சென்ற போது பரிதாபம்; கன்டெய்னர் லாரி மோதி ராணுவ ஊழியர் பலி
x

எண்ணூரில் நடைபயிற்சி சென்ற போது கன்டெய்னர் லாரி மோதி ராணுவ ஊழியர் பரிதாபமாக பலியானார்.

எண்ணூர்,

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்தாசன் (வயது 45). பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் எண்ணூர் தாழங்குப்பம் சென்று அங்குள்ள அவரது தங்கை ஜெயா வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து தாழங்குப்பம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முகத்துவார ஆற்று மேம்பாலம் வழியாக தாழங்குப்பம் நோக்கி வந்த கனரக லாரி ஒன்று அருள்தாசன் மீது மோதியது. இந்த விபத்தில் அருள்தாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

உறவினர்கள் போராட்டம்

இந்த சம்பவம் குறித்து அறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராணுவ ஊழியர் அருள்தாசனின் உடலை மீட்க முயன்றனர். அப்போது அங்கு கூடிய அவரது உறவினர்கள் அவரது உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முறையிட்டனர்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இது தொடர்பாக எண்ணூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story