மனைவியை கொன்ற வழக்கில் பெயிண்டர் கைது


மனைவியை கொன்ற வழக்கில் பெயிண்டர் கைது
x

கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற வழக்கில் பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

பெயிண்டர்

கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 33), பெயிண்டர். இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சுந்தர் இரண்டாவதாக லட்சுமி (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

லட்சுமி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சுந்தருடன் அவருடைய முதல் மனைவி கலாவிற்கு ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கணவரை பிரிந்து, பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார்.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் சுந்தர் தனது 2-வது மனைவியுடன் வசித்து வந்தார் குழந்தைகள் 2 பேரில் ஒருவன் பாட்டி வீட்டிலும், மற்றொருவன் விடுதியிலும் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் சுந்தருக்கும், அவரது 2-வது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

கடந்த 19-ந் தேதி இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை சுந்தரின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரத்தின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து கதவை திறந்து பார்த்த போது உள்ளே லட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் குடும்ப பிரச்சினையில் லட்சுமியை அவரது கணவரே கழுத்தை அறுத்து கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த சுந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சமாதானம்

எனக்கும், எனது 2-வது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது. இதனால் அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு செல்வார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் அவரது தாய் சாந்தா வீட்டிற்கு சென்றார். அவரை சமாதானம் பேசி அழைத்து வந்தேன். இரவு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்தேன். சாப்பிட்ட பிறகு எங்களிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் நான் அரிவாள்மனையால் மனைவியின் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைதான சுந்தரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story