சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர் போக்சோவில் கைது
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27), பெயிண்டர். இவருக்கும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து 2 பேரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் மணிகண்டன், சிறுமியுடன் உடுமலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் மணிகண்டனுக்கும், சிறுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்படவே, மனவேதனை அடைந்த சிறுமி பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மணிகண்டன் பொள்ளாச்சிக்கு வந்து, சிறுமியை தன்னுடன் உடுமலைக்கு வருமாறு கூறியுள்ளார். சிறுமி வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.
கொலை முயற்சி
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் சிறுமியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை திருமணம் செய்ததற்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.