பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெயிண்டர் கைது


பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெயிண்டர் கைது
x

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

தங்க சங்கிலி பறிப்பு

இலுப்பூர் அருகே சமாதான புரத்தை சேர்ந்தவர் செழியன். இவரது மனைவி மலர் (வயது 50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை விராலிமலையில் இருந்து இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மலரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர் இலுப்பூர் மேலப்பட்டி அருகே உள்ள வேகத்தடையில் சென்ற போது நிலைதடுமாறி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அவர் காயமடைந்தார்.

பெயிண்டர் கைது

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சையின் போது அவரது பாக்கெட்டில் தங்க சங்கிலி இருந்ததை கண்டு டாக்டர்கள் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து டாக்டர்கள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மலரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. இவர், புதுக்கோட்டை அருகே உள்ள லேனாவிளக்கு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வராஜ் மகன் விமல்ராஜ் என்பதும், பெயிண்டர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story