மரத்தில் ஏறி பெயிண்டர் திடீர் போராட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே செல்போனை மீட்டு தரக்கோரி மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெயிண்டரால் பரபரப்பு நிலவியது.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே செல்போனை மீட்டு தரக்கோரி மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெயிண்டரால் பரபரப்பு நிலவியது.
போராட்டம்
சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30), பெயிண்டர். இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். பின்னர் பிரகாஷ் அங்கிருந்த புளியமரத்தில் ஏறி நின்று திடீரென போலீசாருக்கு எதிராக கோஷமிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும் போது, புதிய பஸ் நிலையத்தில் எனது செல்போனை பெண் ஒருவர் பறித்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் செல்போனை மீட்டு தரவில்லை என்றார்.
பரபரப்பு
இதையடுத்து போலீசார், அவரிடம் கூறுகையில், விசாரணை நடத்தி செல்போன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் 10 நிமிட போராட்டத்துக்கு பின்பு பிரகாஷ் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். மேலும் அவர் தன்னுடைய கையை பிளேடால் கீறி இருந்தார். இதனால் காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பிரகாசிடம் செல்போனை பறித்தது திருநங்கை என்பது தெரியவந்தது.
செல்போனுக்காக பெயிண்டர் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.