மனைவியை கத்தியால் குத்திவிட்டு பெயிண்டர் தற்கொலை
மனைவியை கத்தியால் குத்திவிட்டு பெயிண்டர் தற்கொலை
கோவை, ஜூலை
கோவையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர்
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32), பெயிண்டர். இவருடைய மனைவி சாலினி (26). இவர்களுக்கு 7 மற்றும் 8 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. குடிப்பழக்கத்துக்கு அடிமையான பூபாலனுக்கும்,அவருடைய மனைவி சாலினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாலினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் கோவை ரத்தினபுரி ஆறுமுககவுண்டர் வீதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் பெற்றோர் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கணவன்-மனைவி தகராறு
அன்னூரில் தனியாக வசித்து வரும் பூபாலன் அடிக்கடி கோவை வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்படுவது உண்டு. அப்போது அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பூபாலன் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக ரத்தினபுரி வந்தார்.
பின்னர் அவர் தனது குழந்தைகளை பார்த்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டியபடி இருந்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
கத்தியால் குத்தினார்
இதையடுத்து பூபாலன் சாலினி வீட்டிலேயே இருந்தார். பின்னர் நள்ளிரவில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டியபடி இருந்தனர். இது அதிகாலை 3 மணிவரை நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சாலினியின் முதுகில் குத்தினார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த சாலினியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் கத்தியால் குத்தியதால் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்த பூபாலன், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்தார். பின்னர் அவர் அந்த வீட்டிலேயே உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.