ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை
காட்பாடி அருகே ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகன் கலைவாணன் என்ற சதீஷ் (வயது 34). இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் தனது தாய் மாமன் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தனக்கு நிரந்தர வேலை ஏதும் கிடைக்கவில்லை என கூறிவந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மீண்டும் குடி போதையில் தனக்கு நிரந்தர வேலை கிடைக்காததால் வாழ பிடிக்கவில்லை என கூறியுள்ளார். பின்னர் காட்பாடி- லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.