பல வண்ண கடற்கரை மணல்களால் அரசியல் தலைவர்களின் ஓவியம் - அசத்தும் ஓவிய ஆசிரியர்


பல வண்ண கடற்கரை மணல்களால் அரசியல் தலைவர்களின் ஓவியம் - அசத்தும் ஓவிய ஆசிரியர்
x

குமரியில் கடற்கரை மணல்களால் அரசியல் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஒருவர் அசத்தி வருகின்றார்.

கன்னியாகுமரி,

குமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால்(வயது67). இவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஆவார். இவர் பள்ளியில் படிக்கும் போதே ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஓவிய போட்டிகளில் பங்கேற்று ஓவிய திறமையை வளர்த்துக் கொண்டார்.

மொத்தம் 32 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது பள்ளிக்கூடங்களில் மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

இவரது ஓவிய திறமையை பாராட்டி கடந்த 2007-2008-ம் ஆண்டு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் குமரி மாவட்ட கலைமன்றத்தின் சார்பில் இவருக்கு ஓவிய கலைஞருக்கான கலை நன்மணி விருது மற்றும் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று இவர் ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார். சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளுக்கு மாறுபட்டு கடற்கரையில் கிடைக்கும் வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார்.

அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துவருகிறார். இவ்வாறாக அவர் வரையும் மணல் ஓவியபடைப்புகளை கண்காட்சி படுத்தியும் வருகிறார்.

இந்த நிலையில் தான் படைத்த மணல் ஓவியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந் தேதி அன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சியில் இடம் பெற உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story