அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி
அரசு பள்ளிகளில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை,
அரசு பள்ளிகளில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து கோடைகால ஒரு வார ஓவிய பயிற்சி முகாமை நடத்துகின்றன. சிவகங்கை அடுத்த கீழக்கண்டணியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த பயிற்சி வருகின்ற 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது
இந்த பயிற்சியானது அரசு பள்ளி மாணவர்கள் 75 பேருக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 25 பேருக்கும் என 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது. 2022-2023-ம் கல்வி ஆண்டில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளில் ஓவியக்கலையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தி, அவ்வாறு பெறப்பட்ட ஓவியங்களில் சிறந்த முறையில் வரைந்த 100 மாணவர்களை மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட தேர்வு குழு மூலம் தேர்வு செய்து இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஓவிய கண்காட்சி
இதில் கலந்துகொள்ளும் மாணவ. மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் கலை சுற்றுலா இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த முகாமில் சிறந்த ஓவிய ஆசிரியர்களை கொண்டு ஓவியங்கள் மற்றும் உலக ஓவியர்கள் பற்றியும், நீர் வண்ண ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், பானை ஓவியங்கள், உயிர் ஓவியங்கள், உருவ ஓவியங்கள், கற்பனை நவீன ஓவியங்கள், சாக்பீஸ் ஆர்ட், போர்ட் ரைட் அக்கரலிக்ஆர்ட், ஆற்று களிமண் சிற்பம் செய்தல், காகித பொம்மை மற்றும் பூக்கள் செய்தல் போன்றவைகள் கற்றுக்கொடுக்கப்படும். பயிற்சி முகாம் இறுதி நாளில் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கொண்டு ஓவிய கண்காட்சி நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.