நடைபாதையில் நடந்த ஓவிய பயிற்சி முகாம்
தேனியில் போதிய முன்னேற்பாடு இன்றி பள்ளி நடை பாதையில் இலவச ஓவிய பயிற்சி முகாம் நடந்தது. இதனால், மாணவ, மாணவிகள் அவதி அடைந்தனர்.
இலவச ஓவிய பயிற்சி
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், மாநில அளவிலான ஓவிய கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக 5 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மாவட்டந்தோறும் இலவச ஓவிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் நடக்கும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் வரையும் ஓவியங்களை கொண்டு மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி தேனி மாவட்ட அளவிலான இலவச ஓவிய பயிற்சி முகாம் தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த பயிற்சியில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 350-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
மாணவ, மாணவிகள் அவதி
ஆனால், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சிறு கூட்டரங்கு, 2 வகுப்பறை மட்டுமே இந்த பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் பங்கேற்றதால், வகுப்பறையில் மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு அமர வைக்கப்பட்டனர்.
அங்கும் இடவசதி இல்லாததால் அங்குள்ள மாலை நேர கல்லூரி கட்டிடத்தின் நடைபாதையில் சமூக இடைவெளி எதுவுமின்றி மாணவ, மாணவிகள் நெருக்கமாக அமர வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், மாணவ, மாணவிகள் பயிற்சி பெறவும், ஓவியம் வரையவும் சிரமம் அடைந்தனர். ஓவியம் வரையவும், வரைந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்டவும் இடநெருக்கடியால் பரிதவித்தனர்.
அதிகாரி தகவல்
இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "வயது வாரியாக 3 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. 7 பயிற்சியாளர்கள் இந்த பயிற்சி அளித்தனர். மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களை கொண்டு விரைவில் மாவட்ட அளவில் ஓவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி அளிக்க போதிய இடவசதி ஏற்பாடு செய்து கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலகத்தில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் கேட்டிருந்தோம். ஆனால், கல்வித்துறை ஏற்பாடு செய்த இடவசதி போதுமானதாக இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளானார்கள்" என்றார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போதிய முன்னேற்பாடு இன்றி கொரோனா பரவும் அச்சத்துடன் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.