பாம்பன் ரோடு பாலத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரம்


பாம்பன் ரோடு பாலத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
x

ரூ. 16 கோடியில் சீரமைக்கப்படும் பாம்பன் ரோடு பாலத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ரூ. 16 கோடியில் சீரமைக்கப்படும் பாம்பன் ரோடு பாலத்தில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாம்பன் ரோடு பாலம்

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள ரெயில் பாலத்திற்கு அடுத்தபடியாக பாம்பன் ரோடு பாலமும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக பாம்பன் ரோடு பாலத்தில் போக்குவரத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கும் பணியானது கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ரோடு பாலத்தை சீரமைக்கும் பணியில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த சீரமைப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. கடலுக்குள் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் கம்புகளினால் சாரங்கள் அமைத்து தூண்கள் முழுவதையும் பார்வையிட்டு சேதமடைந்த மற்றும் கீறல் விழுந்த தூண்களில் ரசாயனம் கலந்த கலவைகள் பூசி அதன் பின்னர் அந்த தூண்களில் புதிதாக ஊதா வர்ணம் அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

4 வர்ணங்கள்

இது பற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணியில் பாலத்தில் உள்ள 78 தூண்களும் முழுமையாக ஆய்வு செய்து தூண்களில் ஏதேனும் கீறல்கள் மற்றும் சேதம் அடைந்திருந்தால் அந்த தூண்கள் முழுமையாக ரசாயனம் கலவைகள் கொண்டு பூசப்பட்டு சீரமைத்து அதன் பின்னர் அனைத்து தூண்களிலும் புதிதாக ஊதா நிறத்தில் வர்ணம் அடிக்கப்படும்.

இதுவரையிலும் 12 தூண்களில் சீரமைப்பு பணிகள் முடிந்து வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தூண்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. பாம்பன் ரோடு பாலத்தில் நான்கு விதமான வர்ணங்கள் அடிக்கப்பட உள்ளது. ஊதா, ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு என 4 விதமான வர்ணங்கள் அடிக்கப்பட உள்ளது.

உப்பு காற்று

தூண்களில் ஊதா நிறமும், கைப்பிடி தடுப்பு சுவரில் மற்றும் மையப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு வர்ணங்களும் அடிக்கப்பட உள்ளது. இன்னும் 8 மாதத்திற்குள் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய வாய்ப்புகள் உள்ளது.

காரைக்குடியில் உள்ள சிக்ரி அறிவியல் ஆய்வகம் அறிவுறுத்தலின் பேரிலேயே பாம்பன் ரோடு பாலத்தில் உப்பு காற்றால் பாதிப்படையாமல் இருக்கும் வகையிலான வர்ணங்கள் அடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story