கல்லணை பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்


கல்லணை பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
x

கல்லணை பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதை முன்னிட்டு கல்லணை பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு நேற்று மாலை நிலவரப்படி 103.78 அடியாக இருந்தது. தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். பருவமழை தொடங்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனரமைப்பு பணிகள்

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு ஜூன் 16-ந்தேதி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாலத்தின் மேல் பகுதி கான்கிரீட் தளம் அப்படியே பெயர்த்து எடுக்கப்பட்டு புதிதாக கம்பி கட்டி அதில் நவீன முறையில் காங்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

வர்ணம் பூசும் பணிகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை முன்னிட்டு கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்திலும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கல்லணை பாலங்களின் மேல் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. மேட்டூர் அணை தண்ணீரை எதிர் நோக்கி கல்லணையில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story