பணியாளர்கள் உணவு அருந்த இட வசதி செய்யக்கோரி வழக்கு -கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பணியாளர்கள் உணவு அருந்த இட வசதி செய்யக்கோரி வழக்கில் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் சங்க பொதுச் செயலாளர் ரெங்கநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் டிபன் பாக்ஸ், உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஸ்கேன் செய்த பிறகே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். இது தொடர்பாக ஆலையின் முதுநிலை மேலாளரின் உத்தரவை ரத்து செய்தும், ஆலையின் பிரதான பாதுகாப்பு இல்லத்தின் முன் பகுதியில் உணவு அருந்தும் அறை வசதியை ஏற்படுத்தி தருமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தரப்பில் குறிப்பிடும் இடத்தில் உணவு அருந்தும் அறை வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அணுமின் நிலைய இயக்குனர் 8 வாரத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.