பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்


பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:00+05:30)

இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று ஆனைமலை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று ஆனைமலை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பாக்கு சாகுபடி

ஆனைமலை ஒன்றியதில் 23 ஆயிரம் ஹெக்டர் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது, ஊடுபயிராக பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டது. இதில் மொகித் மங்களா, குட்ட மங்களா என 2 ரகங்கள் உள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பாக்கு அறுவடை சீசன் ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை என்றாலும், பாக்கு விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள வளாகத்தில் விவசாயிகள் பாக்கு காய்களை உலர்த்தி வருகின்றனர்.

குறைந்த விலை

தற்போது ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ.55 முதல் ரூ.60 வரையும், பாக்கு பழம் ரூ.65-க்கும் விற்பனையாகிது. உலர்ந்த பாக்கு கிலோ ரூ.125 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறையும் சமயத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்குகளை மூட்டைக்கு தினமும் 10 பைசா செலுத்தி இருப்பு வைக்கலாம். விலை அதிகரிக்கும்போது, அதை விற்பனை செய்யலாம். ஆனால் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு பாக்குகள் அவ்வப்போது கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பாக்கு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கொள்முதல் மையம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பாக்கு மரத்தில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். இருப்பினும் அறுவடை சமயத்தில் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் இருந்து குறைவான விலைக்கு பாக்குகளை கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த மாதத்தில் வெளிமாநிலங்களில் ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ.80, உலர்ந்த பாக்கு ரூ.200-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ஆனைமலை ஒன்றியத்தில் ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ.40, உலர்ந்த பாக்கு ரூ.140-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் வருவாய் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் தொடங்குவது போன்று பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story