பாக்கு கொள்முதல் நிலையம்


பாக்கு கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாக்கு கொள்முதல் நிலையம்

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பாக்கு சாகுபடி

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், செம்மேடு, நரசிபுரம் மற்றும் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பாக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாக்கு சாகுபடியில் வருவாய் சீராக இருப்பதால் ஏராளமான விவசாயிகள் இதை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பாக்கு சாகுபடி செய்தால் அதற்குள் ஊடுபயிராகவும் சில வகை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்பதால் கோவை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இந்த பாக்கு சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவற்றை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு போதிய வசதி இல்லாமல் இருக்கிறது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

4 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை

ஒரு ஏக்கரில் 7½-க்கு 7½ அடி இடைவெளியில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாக்கு நாற்று நட்டபின் அதில் இருந்து 4 ஆண்டுக்குள் அது விளைச்சலுக்கு வந்து விடுகிறது. அதன்படி 4 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். கோவை மாவட்டத்தில் பெரும்பாலும் முகித் என்கிற வகை பாக்குகள்தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஏக்கருக்கு வருடத்துக்கு 7 முதல் 11 டன் வரை மகசூல் கிடைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் விளைச்சல், தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருப்பதால் போதிய விலையும் தற்போது கிடைத்து வருகிறது. ஆனால் இங்கு அவற்றை விற்பனை செய்ய கொள்முதல் நிலையம் இல்லை.

கொள்முதல் நிலையம்

பாக்குகளை அறுவடை செய்து அவற்றை வியாபாரிகளிடமே விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. தற்போது கிலோ ரூ.37 முதல் ரூ.52 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் பகுதியில் கொள்முதல் நிலையம் இருந்தால் கூடுதலாக 10 சதவீத விலை கிடைக்கும். அத்துடன் அவற்றை விற்பனை செய்ய எளிதாக இருக்கும்.

இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு கொள்முதல் நிலையம் அமைத்தால் இன்னும் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்வார்கள்.

விழிப்புணர்வு

எனவே அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து கொள்முதல் நிலையம் திறப்பதுடன் பாக்கு மரத்தை தாக்கும் நோய் குறித்தும், அதற்கு அளிக்கப்படும் தடுப்பு முறை குறித்தும் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story