ஊடுபயிராக பாக்கு...வேலிப்பயிராக தேக்கு...


ஊடுபயிராக பாக்கு...வேலிப்பயிராக தேக்கு...
x
திருப்பூர்


கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் ஊடுபயிர் மற்றும் வேலிப்பயிர் சாகுபடியில் தென்னை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொப்பரை கொள்முதல்

திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சாகுபடிப்பயிராக தென்னை உள்ளது. இங்கு சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கும் நிலையே உள்ளது. சமீப காலங்களாக தென்னை விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை நீடிக்கிறது. மேலும் தேங்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கினால் கொப்பரைக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. ஆண்டு முழுவதும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டும். தேங்காய் எண்ணெயை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.

சொட்டுநீர்ப்பாசனம்

பருவமழை கைகொடுக்காத நிலையில் ஒருசில பகுதி விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி லாரிகள் மூலம் கொண்டு வந்து தென்னை மரங்களைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள்.இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் ஓரளவு தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் சொட்டுநீர்ப்பாசனம் உள்ளிட்ட பாசன முறைகளைப் பயன்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதன்படி ஒருசில விவசாயிகள் வேலிப்பயிராக தேக்கு சாகுபடி செய்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மொத்தமாய் ஒரு தொகையை வருவாயாக பெற முடியும். இதுதவிர ஒருசில விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக வாழை, கோகோ, காய்கறிகள் உள்ளிட்ட பலவகையான பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் தென்னையில் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழிப்புணர்வு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தேங்காய், உரிமட்டை, கொப்பரை உள்ளிட்ட எந்த பொருளுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை.ஒவ்வொரு ஆண்டிலும் சீசன் ஆரம்பித்து தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைவதும், வரத்து குறைந்ததும் விலை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை உயராத நிலையே உள்ளது.

தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தேங்காய் எண்ணெய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவரை விவசாயிகள் சோர்ந்து போகாமல் ஊடுபயிர் மற்றும் வேலிப்பயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபடலாம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story