பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் ரத்து:அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொள்ளாச்சி
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்செந்தூர் ரெயில் ரத்து
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு காலை 7.10-க்கு வந்து, திருச்செந்தூருக்கு மாலை 3.45 மணிக்கு சென்று அடைகிறது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கும், பாலக்காட்டிற்கு இரவு 9.55 மணிக்கும் வந்து சேருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் கடந்த 6-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நிறுத்தப்படுகிறது. இதேபோன்று திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் கூடல்நகர் வரை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் மார்ச் 1, 2-ந்தேதிகளில் பாலக்காட்டுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த எந்த தகவலும் அறிவிப்பு பலகையில் இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் எடுப்பதற்கு செல்லும் முன் ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது தெரிகிறது. இதனால் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் வருகிற 7-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. எனவே திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது குறித்து ரெயில் நிலைய நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.