தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பழனி-கொடைக்கானல் ரோப்கார் சேவை


தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு அனுமதி அளித்ததன் எதிரொலியாக, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பழனி-கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

பழனி-கொடைக்கானல்


திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோவில், சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளது. இதில், திருவிழா காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.


இதேபோல் சீசன் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதும், பழனிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கொடைக்கானலுக்கு செல்வதும் வழக்கம்.


இவ்வாறு வருகிற சுற்றுலா பயணிகள், 64 கிலோமீட்டர் தூரம் கொண்ட பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த மலைப்பாதையில் சென்று வர சுமார் 3 மணி நேரம் ஆகும்.


ரோப்கார் திட்டம்


அபாயகரமான கொண்டைஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்தை எளிதாக்கவும், சுற்றுலா, வணிகம் வளர்ச்சி பெறவும் பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த திட்டம் பழனி, கொடைக்கானல் பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் இருந்து வந்தது. எனவே ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறும்.


முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து, கடந்த 2005-ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த திட்டம் பற்றி எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.


மத்திய அரசு அனுமதி


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப்கார் திட்டம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டமும் இடம் பெற்றிருந்தது.


12 கிலோமீட்டர் தூரத்துக்கு இடையே அமையும் இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.


என்ஜினீயர்கள் ஆய்வு


இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டில் இருந்து தனியார் ரோப் நிறுவன என்ஜினீயர்கள் மார்க்ஸ் டிருஷ்டர், யார்க் ஆகியோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


இதைத்தொடர்ந்து அவர்கள் பழனி ரோப்கார் நிலையத்தை பார்வையிட்டு அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தில் பழனி, கொடைக்கானலில் ரோப்கார் நிலையங்கள் அமைய உள்ள பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளோம். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம் என்றனர். அவர்களுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சங்கர சுப்பிரமணி, உதவி பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


இயற்கை வளம் பாதிக்காத வகையில்...


தமிழகத்திலேயே முதன்முறையாக ஆன்மிகம் மற்றும் சுற்றுலா நகரங்களான பழனி-கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-


மாரிமுத்து (சுற்றுலா பயணி):- திண்டுக்கல் மாவட்ட மக்களின் கனவு திட்டமான பழனி-ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பழனி, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலா, வணிகம் ஆகிய துறைகள் வளர்ச்சி பெறும். ஆனால் வன வளத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக ரோப்கார் நிலையம் அமைய உள்ள மலையடிவார பகுதி இயற்கை வளம் மிக்கது. எனவே அங்கு வாகன நிறுத்தம் ஆகியவை அனுமதிக்க கூடாது. ஏர்போர்ட்டில் உள்ளது போல் பழனியில் நிலையம் அமைத்து அங்கிருந்து தனி வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வேண்டும்.


சுற்றுலா மேம்பாடு


காசி விஸ்வநாதன் (ஆசிரியர்):- கொடைக்கானல் போன்ற மலைவாசஸ் தலங்களுக்கு செல்ல இதுபோன்ற ரோப்கார் திட்டம் அமைப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சுற்றுலா, ஆன்மிகம் சார்ந்த இடங்கள் மேம்பாடு அடையும். தமிழகத்தில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில், ராமேசுவரம் கடல் வழியே ரெயில் போல இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும். எனவே இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.


மருதநாயகம் (சமூக ஆர்வலர்):- பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு மலைப்பாதையில் வாகனங்களில் சென்று வர நேரம் விரயமாவதோடு விபத்து அபாயம் உள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்து வருகிறது. ரோப்கார் திட்டத்தால் விபத்து நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படும். ஆனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் செயல்படுத்த வேண்டும்.


பொருளாதார வளர்ச்சி


அஜ்மல்கான் (வியாபாரி):- கொடைக்கானல் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கனவான பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டம் செயல்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். உரிய முறையில் கொடைக்கானல் நகருக்கு முழுமையாக இந்த சேவையை அமைக்க வேண்டும். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.


எஸ்.குமரன் (ஒப்பந்ததாரர்):- ஆன்மிக நகரமான பழனி நகரில் இருந்து கொடைக்கானல் நகருக்கு ரோப்கார் சேவை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ரோப் கார் வசதி சேவைக்கான ஆய்வு பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த பணியினை விரைவாக முடித்து, ரோப்கார் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


----------------





சமூக வலைத்தளங்களில் வரவேற்பு


பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நாள் முதலே பழனி, கொடைக்கானல் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த திட்டத்துக்கு வரவேற்பு அளித்தும், இது தொடர்பான பதிவுகளையும் வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்தும் வருகின்றனர்.


நிலையங்கள் அமைக்க வாய்ப்பு


பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தில் முதற்கட்டமாக ரோப்கார் நிலையங்கள் அமைக்கப்படும். இதில் பழனி-அஞ்சுவீடு இடையேயும், அஞ்சுவீடு-கொடைக்கானல் குறிஞ்சிஆண்டவர் கோவில் பகுதி இடையேயும் நிலையங்கள் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொறியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் முதல் ரோப்கார்


தமிழகத்திலேயே முதன்முறையாக ஆன்மிக தலம் சென்று வருவதற்கான ரோப்கார் திட்டம் பழனி முருகன் கோவிலில் தான் செயல்படுத்தப்பட்டது. தற்போது சுற்றுலாவை மேம்படுத்த பழனி-கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் திட்டம் அமைக்கப்பட இருப்பதும் பழனியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் வணிகம், சுற்றுலா, ஆன்மிகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறும்.


திருப்பதிக்கு இணையாக வளர்ச்சி


நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பழனி முருகன் கோவிலுக்கு தான் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இதேபோல் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலும் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. எனவே இந்த இரு நகரங்களுக்கு இடையே ரோப்கார் திட்டம் அமைந்தால், பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் திருப்பதிக்கு இணையாக பழனியும் வளர்ச்சி பெறும்.



Next Story