பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்


பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்
x

பழனி லட்சுமி-நாராயணபெருமாள் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

சித்திரை திருவிழா

பழனி மேற்கு ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலை 7 மணிக்கு லட்சுமி நாராயணப்பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வருகிறார். மேலும் இரவு 7 மணிக்கு சிம்மம், சேஷம், அனுமார் வாகனம், மரச்சப்பரம் மற்றும் தங்ககுதிரை போன்றவற்றில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் 7-ம் நாளான கடந்த 2-ந்தேதி, லட்சுமி-நாராயணப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தேரோட்டம்

இந்நிலையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக 5.40 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேரேற்றம் நடந்தது. அப்போது லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து காலை 7.35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கி தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா...கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு என 4 ரதவீதிகளையும் சுற்றி நிலை வந்து சேர்ந்தது.

பின்னர் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதாசுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story