பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்


பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரோப் பொருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

திண்டுக்கல்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. மேலும் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் மேற்கு கிரிவீதியில் உள்ள மின்இழுவை ரெயில் நிலையத்தில் இருந்து 3 மின்இழுவை ரெயில்கள் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 3-ம் எண் மின்இழுவை ரெயிலில் இணைக்கப்பட்ட ரோப் (கம்பி வடம்) பழுதானது. இதையடுத்து அதன் சேவை நிறுத்தப்பட்டு மீதமுள்ள 2 ரெயில்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். பின்னர் மின் இழுவை ரெயிலில் உள்ள ரோப் அகற்றப்பட்டு புதிய ரோப் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக ராஞ்சி பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிதாக 2 ரோப்கள் கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டது.

மீண்டும் தொடக்கம்

இதில் ஒரு ரோப்பை 3-ம் எண் மின் இழுவை ரெயிலில் பொருத்தும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மற்றொரு ரோப்பை கோவில் நிர்வாகத்தினர் இருப்பு வைத்துக்கொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த பணி நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் 3-ம் எண் மின்இழுவை ரெயிலில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் 3-ம் எண் மின்இழுவை ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. முன்னதாக மின்இழுவை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழனி இணை ஆணையர் நடராஜன், செயற்பொறியாளர் நாச்சிமுத்து, பொறியாளர் குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து இயக்கப்பட்ட ரெயிலில் பக்தர்கள் ஆனந்தமுடன் பயணம் செய்தனர்.





Next Story